உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது, பந்து வீச்சில் ஏற்படுத்தப்பட்ட தாமதத்துக்காக இந்திய அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, போட்டிக் கட்டணத்தில் இந்திய அணிக்கு 100 சதவீதமும், ஆஸ்திரேலியாவுக்கு 80 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய அணி, போட்டிக்கான கட்டணத்தில் தமது முழுத்தொகையையும் இழந்துள்ளது.
போட்டியில் வழங்கப்பட்ட நேரத்தில் இந்திய அணி தமது இலக்கை விட ஐந்து ஓவர்கள் குறைவாகவே பந்து வீசியிருந்தது.
அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி இலக்கை விட நான்கு ஓவர்கள் குறைவாகப் பந்து வீசியிருந்தது.
இந்தநிலையில், இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில்லுக்கும் அவரது போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நான்காவது நாளில் ஆஸ்திரேலிய வீரர் கெமரூன் கிரீனிடம், கில் கேட்ச் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தபோது சர்ச்சை ஏற்பட்டது.
எனினும், தொலைக்காட்சி நடுவர் அதனை ஆட்டம் இழப்பாக அறிவித்தார்.
இதனையடுத்து, அன்றைய நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகு சுப்மன் கில் ருவிட்டரில் பிடியெடுப்பு குறித்து விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.
இதற்காக, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவருக்கு ஒரு ஒழுக்கமீறல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது என்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.