இந்திய மீனவர்களைத் தடுக்கும் வல்லமை இலங்கைக் கடற்படையினரிடம் இல்லை! – அமைச்சர் தெரிவிப்பு

Share

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை இலங்கைக் கடற்படையினரிடம் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்படையினரின் டோறாப் படகையே இந்திய மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தக் கூடியன என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பான விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜனால் எழுப்பப்பட்டது.

“2004ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுடன் இது தொடர்பில் பேசி வருகின்றோம். அவர்களும் இரண்டு ஆண்டுகள் தாருங்கள் என்று கேட்கின்றார்கள். ஆனால், செய்யவில்லை.

அவர்களுக்கும் தாங்கள் செய்வது தவறு என்று தெரியும். ஆனால், விடுகின்றார்கள் இல்லை. அத்துமீறும் இந்திய மீனவர்களின் பின்னால் தமிழக அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். அதனால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

எமது கடற்படையினர் இரண்டு காரணங்களுக்காக இந்திய மீனவர்கள் விடயத்தில் தயக்கம் காட்டுகின்றனர். அரசியல் காரணங்களுக்காகவும், இந்திய மீனவர்களின் படகுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களிடம் இல்லை என்பதாலும் தயங்குகின்றனர்.

இந்திய மீனவர்களின் படகுகள் மோதினால் கடற்படையினரின் படகுதான் சேதமாகும்” – என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த கடற்படையின் வடக்கு மாகாண இரண்டாம் நிலை அதிகாரி, “இந்திய மீனவர்களை அவர்கள் வரும் படகுகளுடன் கைது செய்கின்றோம். அவர்கள் பல நூறு படகுகளில் வரும்போது கட்டுப்படுத்துவதற்கான வளம் எம்மிடம் இல்லை. இந்திய மீனவர்களை நாம் சுட்டுப்பிடிப்பதில்லை. அவர்களை மனிதாபிமானத்துடன் அணுகின்றோம். அத்துமீறும் மீனவர்கள் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் அணுகுவதே சிறப்பானது” – என்று குறிப்பிட்டார்.

“இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 20 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடற்படையின் பொறுப்பு. எமது மீனவர்களைப் பாதுகாக்க முடியாத கடற்படை எமது பிரதேசத்தில் எத்தனையோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து இன்னமும் ஏன் நிலைகொண்டுள்ளது?” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார்.

“அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றால் நீங்கள் எப்படி இன்னொரு நாட்டிடம் இருந்து எமது நாட்டைக் காப்பாற்றப்போகின்றீர்கள்?” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இந்தியத் தூதுவருடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கடற்படையின் ஊடாக எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற திட்டத்தைச் சமர்ப்பிக்குமாறு கடற்படை அதிகாரிக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு