16 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
மழை காரணமாக நேற்றைய போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பைஇந்தியன்ஸ் அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பில் அதிகப்படியாக சுப்மன் கில் 129 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சுப்மன் கில் ஐ.பி.எல். போட்டிகளில் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும். இவர் 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 7 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இந்தச் சதத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஷ் சவ்லா 45 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாட மும்பை இந்தியஸ் அணி களத்தில் இறங்கியது.
234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியைத் தழுவியது.
இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகப்படியாக, சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும், திலக் வர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொஹம்மட் ஷமி 2 விக்கெட்டுக்களையும், மோகித் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 7 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
இதற்கமைய, நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.