இலங்கையில் இனப்படுகொலை நடந்தது உண்மையே; கனேடியப் பிரதமரின் அறிக்கை சரியானது! – அலி சப்ரியின் நிராகரிப்பு பெறுமதியற்றது என்கிறார் சம்பந்தன்

Share

“இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளமையைக் கண்டிக்கின்றோம். அலி சப்ரியின் பதிலை நாம் உதாசீனம் செய்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

‘மே 18ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையைக் கனேடிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரினதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது’ – என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட அறிக்கைக்கு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டனம் வெளியிட்டதுடன் அதனை நிராகரித்துமிருந்தார். இவை தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. அது இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் தெரியும்.

இலங்கையில் போர் உக்கிரமடைந்த காலத்திலும், போர் முடிவுக்கு வந்த காலத்திலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. அதை மறுக்கும் தற்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அப்போது அமைச்சராக இருக்கவில்லை.

உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அலி சப்ரியின் பதிலை நாம் உதாசீனம் செய்கின்றோம். அது பெறுமதியற்ற நிராகரிப்பு.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. பல்வேறு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை இலங்கை அரசு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையைச் செய்யவில்லை. வெளிநாட்டு விசாரணைக்கும் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. உள்நாட்டு விசாரணையையும் நடத்தவில்லை.

ஏன் உள்நாட்டு விசாரணை இல்லை? என்ன காரணத்துக்காக உள்நாட்டு விசாரணை இல்லை? உள்நாட்டில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணையை இலங்கை அரசு இதுவரை நடத்தவேயில்லை. அதிலிருந்து தாங்கள் செய்தது குற்றம்; விசாரணை நடத்தினால் உண்மை வெளிப்படும் என்றும் இலங்கை அரசு அஞ்சுகின்றது என்பது நன்றாகப் புரிகின்றது.

எனவே, அலி சப்ரியின் பெறுமதியற்ற கருத்துத் தொடர்பில் நான் அதிகம் பேச விரும்பவில்லை. அவரின் கருத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது உண்மை. அது தொடர்பான கனேடியப் பிரதமரின் அறிக்கையை வரவேற்கின்றோம். இனியாவது -– இப்போதாவது ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த முடியுமா? என்று இலங்கை அரசிடம் கேட்கின்றோம். இலங்கை அரசுக்குத் துணிவிருந்தால் அதைச் செய்யட்டும்.” –என்றார்.

– அரியகுமார் யசீகரன்

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு