இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பன உலக ரக்பி விதிகளை மீறும் நிலையில், உலக ரக்பி பேரவை, இலங்கை ரக்பியை உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
எனினும், உலக ரக்பி பேரவை மற்றும் ஆசிய ரக்பி, சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் என்பன இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளதாக சர்வதேச ரக்பி பேரவை தெரிவித்துள்ளது.
நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே உடனடி முன்னுரிமையாகும்.
இந்தநிலையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகள் மற்றும் ஏனைய போட்டிகளில் பங்கேற்க முடியும் என்றும் ரக்பி பேரவை குறிப்பிட்டுள்ளது.
உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி ஆகியன அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து அவசரமாகச் செயற்பட்டு தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையுடன் கூட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தை அமைக்கும் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.