சிகிச்சைக்கு வந்த கைதியால் இளம் பெண் பயிற்சி மருத்துவர் குத்திக் கொலை!

Share

இளம் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்ட கைதியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய வந்தனா தாஸ் (வயது 23) என்பவரை இன்று அதிகாலையில் மருத்துவமனைக்குப் பொலிஸாரால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட சந்தீப் என்ற கைதி கத்தியால் தாக்கியுள்ளார்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழிதெரியாத பயிற்சி மருத்துவர் தாக்குதலில் படுகாயமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கழுத்தில் ஏற்பட்டிருந்த ஆழமான காயம் அவரது உயிரிழப்புக்கு காரணமானதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்ட சந்தீப் முதலில் தனது உறவினரைத் தாக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளார். அப்போது பயிற்சி மருத்துவரை கழுத்து மார்பு எனக் கடுமையாகக் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் சந்தீப் உறவினர், பொலிஸார் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவரைத் தாக்கிய கைதியான சந்தீப் ஆசிரியர் பணி செய்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுபோதைக்கு அடிமையான அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அயலவர்களுடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபடும் சந்தீப் சம்பவத்தன்று உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டு பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிம்ஸ் மருத்துவமனையில் இறந்த பயிற்சி மருத்துவரின் உடலை மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இந்தநிலையில், இச்சம்பவம் குறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கத்திக் குத்தால் பெண் மருத்துவர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர், “மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட ஒருவரால் பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.

அந்த மருத்துவமனையில் ஒரு பொலிஸ் சோதனைச் சாவடி உள்ளது. சம்பவத்தின் போது மருத்துவமனையில் பல சுகாதார அதிகாரிகளும், தலைமை மருத்துவ அதிகாரியும் இருந்துள்ளனர்.

அனுபவமற்ற அந்த இளம் மருத்துவர் குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து பீதியடைந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து அவர் தாக்கப்பட்டிருக்கின்றார்” – என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள சட்ட மன்ற உறுப்பினர் கணேஷ் குமார், “மதுவுக்கு அடிமையான ஒருவரின் தாக்குதலில் இருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும்? கத்தியால் குத்தியவர் மருத்துவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

இந்தக் கொலை சம்பவத்தைக் கண்டித்து கேரள மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு