ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் கூட்டாக அதிரடித் தீர்மானம்!

Share

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்குக் கிழக்கு எம்.பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்.பிக்கள் சந்திப்பைப் புறக்கணிப்பர் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அழைத்து அதிகாரப் பரவலாக்கல், வடக்கிலுள்ள பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாகக் கலந்துரையாட அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் தாயகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கருதப்படுவதால் அதிகாரப் பரவல் வடக்கு – கிழக்கைச் சார்ந்தது. அந்தவகையில் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாதவிடத்து குறித்த பேச்சைப் புறக்கணிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எதிர்பார்த்துள்ளோம்.

இதேவேளை, குறித்த பேச்சுக்குக் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம்.” – என்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், பா.கஜதீபன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், செயலாளர் துளசி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆர்.இராகவன், ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு