யாழ்ப்பாணம், தையிட்டியில் பௌத்த விகாரையை அகற்றக் கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்து கலந்துரையாடினர்.
விகாரையை அகற்றக் கோரி நேற்று மாலை முதல் நாளை வரையில் விகாரை முன்பாக தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்குடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அந்நிலையில் நேற்றிரவு அவ்விடத்தற்கு வந்த பொலிஸார், போராட்டக்காரர்களின் கொட்டகையை அங்கிருந்து பிடுங்கி அகற்றினர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து விலகிச் செல்ல வேண்டும் எனவும், இல்லையெனில் அனைவரையும் கைது செய்வோம் எனவும் கூறி பலரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அதேவேளை, வீதிகளில் தடைகளை ஏற்படுத்திப் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வேறு எவரும் செல்ல முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தினர்.
பொலிஸாரின் மிரட்டல்களைச் செவி சாய்க்காது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கான உணவு , நீர் மற்றும் மருந்து ஆகியவற்றை வழங்கவும் பொலிஸார் அனுமதிக்காத நிலையில் பல மணி நேரத்தின் பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவினர் உள்ளிட்டவர்களின் அழுத்தங்கள் காரணமாக இன்று அதிகாலை 1.30 மணியளவில் உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது.
அதேநேரம் இன்று போராட்டக் களத்தில் நின்ற பெண் உள்ளிட்ட ஐவரைப் பலாலி பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பொலிஸ் தடைகளை மீறி உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்டவர்களைச் சந்தித்தது தமது ஆதரவைத் தெரிவித்துக் கலந்துரையாடினர்.
இதேவேளை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதித் தடை கம்பிகள் என்பவற்றை விகாரைக்கு அருகில் வீதிகளில் போட்டு, வீதித் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
அதேவேளை பெருமளவான இராணுவத்தினர் துப்பாக்கிகளுடன் விகாரையைச் சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டுக் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.