அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாகக் கொண்டு சென்ற மதுபானப் போத்தல்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சவளக்கடைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பியர் மற்றும் மதுபானப் போத்தல்கள் ஓட்டோவில் வெல்லாவெளிப் பகுதிக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகின்றன என்று சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான டீ.எம்.எஸ்.கே தசநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய வீதி ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஓட்டோ ஒன்றில் 33, 38 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் 175 இற்கும் அதிகமான சாராயப் போத்தல்களையும், ஒரு தொகுதி பியர் போத்தல்களையும் சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்ததுடன் ஓட்டோவையும், அதில் இருந்த மதுபானப் போத்தல்களையும் மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மதுபானப் போத்தல்கள் சுமார் பல இலட்சம் ரூபா பெறுமதியானவை என்று சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமான மதுபானப் போத்தல்களைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் மதுபானப் போத்தல்களை உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாகப் பதுக்கிக் கொண்டு சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சவளக்கடைப் பொலிஸார், அவர்களைக் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.