பேச்சை நிறுத்திச் செயலில் காட்டுங்கள்! – ரணிலிடம் மனோ இடித்துரைப்பு

Share

“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகின்றீர்கள். பெப்ரவரி நான்காம் திகதியளவில் தீர்வு காண்போம் என்றும் கூறினீர்கள். இப்போதும் மீண்டும், மீண்டும் கூறுகின்றீர்கள். இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்சினை தொடர்பில், உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார். ஆனால், இனி நீங்கள் பேச்சை நிறுத்தி, செயலில் காட்டுங்கள். “வோக் யுவர் டோக் மிஸ்டர் பிரசிடென்ட்!”. (பேச்சின்படி நடந்து காட்டுங்கள்!).

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மே தின உரை தொடர்பில் மனோ எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் இன்று இருக்கும் பெரும்பான்மை கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், தேசிய இனப்பிரச்சசினை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க. அதில் சந்தேகம் இல்லை. ஏனையோரைப் பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன.

எனினும், ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமனம் பெற்ற பின் பலமுறை இந்தக் கால அட்டவணைக்குள் இனப்பிரச்சினை தீர்வு என பலமுறை கூறிவிட்டார். தமிழ் மக்களுக்கும் இந்த வசனம் பரிச்சயமானதாகும்.

சர்வகட்சி மாநாட்டை நடத்தி முதற்கட்டமாக 13ஐ பற்றி பேசிய போது அதுவரை ஒளிந்திருந்த ஆமதுருக்கள் தெருவுக்கு வந்தார்கள். அத்துடன் அது நின்று போய் விட்டது.

இன்று அரகல போராட்டத்துக்குப் பிறகு, கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, சர்வதேச சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினை தீர்வு பற்றி, தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேச முன் சிங்களக் கட்சிகளை அழைத்து நாட்டின் உண்மை நிலைமை பற்றிப் பேச வேண்டும். சிங்கள மக்களை விளித்து நேரடியாகக் கூற வேண்டும். இனிமேலும் இதைத் தள்ளிப் போட முடியாது என எடுத்துக் கூற வேண்டும். சர்வதேச சமூகமும் அதற்குச் சாதகமாக நடந்துகொள்ளும் என நான் அறிகின்றேன்.

தற்போது நிலைமையைப் பாருங்கள். “இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்றெல்லாம் கூறுவதற்கு முன், வடக்கு, கிழக்கில் காணி பறிபோகின்றது. தொல்பொருள் திணைக்களம், தொல்லை திணைக்களம் ஆகி விட்டது. சிவனைத் தூக்கிக் கடாசி விட்டு, ஆமதுருக்கள், இராணுவத் துணையுடன், புத்தனை பிரதிஷ்டை செய்கின்றார்கள். காவி உடையில் அரசியல் செய்யும் ஆமதுருக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு இதுதான் வேளை. இல்லாவிட்டால் கடும் பதற்ற நிலைமை வடக்கு – கிழக்கில் விரைவில் உருவாகும்.

மலைநாட்டில், வந்தவன், போனவன் எல்லாம் அடாத்தாகத் தோட்டக் காணிகளைப் பிடிக்கிறான். ஆனால், 200 வருட வரலாற்றைத் தொட்டு விட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வாழ, பயிர் செய்ய காணி இல்லை. மலையகத் தமிழருக்காக நான் குரல் கொடுத்தால், என்னைத் “தேயிலைக் கொழுந்து பறிக்க வந்தவன்” என்கின் றார்கள். “தோட்டக் காட்டான்” என்கின்றார்கள். இது மலைநாட்டுத் பெருந்தோட்ட பகுதிகளில் கடும் பதட்ட நிலைமையை மெதுவாக உருவாக்கி வருகின்றது.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு