“அரசு முன்னெடுத்த அரசியல் தீர்வு தொடர்பான விவகாரங்களை எதிரணிகளே குழப்பியடித்தன. தமிழ்க் கட்சிகள் அரசுக்கு இந்த விடயத்தில் ஒத்துழைத்தாலும் அவர்களும் எதிரணியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றனர்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சி பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்க்கட்சிகள்தான் குழப்பியடிக்கும் வகையில் செயற்படுகின்றன. இறுதியாக நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்திருந்தது. இதிலிருந்து இந்த முயற்சியைக் குழப்பியடிக்கும் எதிரணியின் வியூகம் எமக்குத் தெரிகின்றது.
தமிழ்க் கட்சிகள் தீர்வு விடயத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினாலும் அவர்களும் எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுகின்றார்கள்.
அரசு – எதிர்க்கட்சி என்று சொன்னால் ஆதரவுகளும் எதிர்ப்புக்களும் இருக்கத்தான் செய்யும். அதற்காக நாட்டினதும் மக்களினதும் நன்மை கருதிய செயற்பாடுகளை எதிர்ப்பதில் அர்த்தமில்லை.
தேசிய இணக்கப்பாட்டுப் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் சர்வகட்சி பேச்சை முன்னெடுத்துச் செல்லலாம்.” – என்றார்.
ஜனாதிபதியின் சர்வகட்சிப் பேச்சில் பங்கெடுப்பதாக இருந்தால் அவரால் சில விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் நிபந்தனை விதித்திருந்தமையும், அவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.