அரச நிறுவனங்களை அவசரப்பட்டு விற்காதீர்! – சஜித் அணி வலியுறுத்து

Share

“அரச நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பது தப்பில்லை. அதற்காக இலாபம் அடைகின்ற எல்லாவற்றையும் அவசரப்பட்டு விற்க முடியாது” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலாபம் பெறும் அரச நிறுவனங்களை விற்பதை எம்மால் ஏற்க முடியாது. தேவையில்லாத சர்வதேச கடன்களைப் பெற்று எம்மால் தாங்கிக்கொள்ள முடியாத வேலைத்திட்டங்களை செய்தனர். அதன் பிரதிபலன்களை நாம் இன்று அனுபவிக்கின்றோம்.

இதனால் உண்டான கடன்களை அடைப்பதற்காக நாட்டின் வளங்களை – இலாபமீட்டும் நிறுவனங்களை விற்பதை ஏற்க முடியாது.

அதேவேளை, தனியார் இல்லாமல் எல்லாப் பிரச்சினைகளையும் அரசால் செய்ய முடியாது. முன்பு தொலைபேசி பழுதானால் அதைத் திருத்துவதற்காக ரெலிகாம் ஊழியர்களின் பின்னால் அலைய வேண்டும். இப்போது அது தனியாருக்குக் கொடுத்துள்ளதால் அந்தப் பிரச்சினை இல்லை.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்படும்போது இலாபம் கிடைத்தது. பின்னர் ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தை மஹிந்த அரச உடமையாக்கியதும் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டு வருகின்றது.

உலகத்தோடு சேர்ந்து போக வேண்டும். இப்படியே இருந்தால் முன்னேற முடியாது. அதற்காக இலாபம் அடைகின்ற எல்லாவற்றையும் அவசரப்பட்டு விற்க முடியாது. அப்படிச் செய்து எப்படி அரசின் இலாபத்தை அதிகரிப்பது?

அஜித் நிவார்ட் கப்ரால் தங்கத்தை விற்றது போல் விற்க முடியாது.நன்றாக ஆய்வு செய்த பின்தான் விற்க வேண்டும். அரசு வர்த்தக செயற்பாடுகளில் இருந்து விலக வேண்டும்.

அன்று அரசின் கையில் இருந்தபோது டெலிகொம் இலாபமடையவில்லை. தனியாருக்குக் கொடுத்ததன் பின்தான் இலாபமீட்டியது. இப்போது இருக்கின்ற முறைமைக்கு ஏற்பவே நாம் பயணிக்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களை எப்படி வாழவைப்பது என்று யோசிக்க வேண்டும். அதனால்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்று நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தோம். நாடு வங்குரோத்து அடையும் முன்பே போகச் சொன்னோம். ஆனால், நாம் வங்குரோத்து அடைந்த பின்பே சென்றோம்.

நாடு வீழ்ந்து கிடக்கும் நேரத்தில் பஸ்களுக்குத் தீ வைக்க முடியாது. ட்ரான்ஸ்போமருக்குத் தீ வைக்க முடியாது. அப்படிச் செய்தால் நாடு இன்னும் சிக்கலில்தான் விழும்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு