விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை! – சென்னையில் பயங்கரம்

Share

சென்னை கே.கே.நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்தவர்கள், அவரை வெட்டிச் சாய்த்து வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி, அம்பேத்கர் குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிப் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. மனைவி, 2 குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.

இவர் நேற்று பாரதிதாசன் காலனி, பி.எஸ்.என்.எல். நிறுவனம் அருகே உள்ள தேநீர் கடையில் தேநீர் குடித்துக்கொண்டு நின்றார். அப்போது மின்னல் வேகத்தில் கார் ஒன்று அங்கு வந்து நின்றது.

அந்தக் காரில் இருந்து சிலர் கையில் அரிவாளுடன் இறங்கினார்கள். அவர்கள் அதிரடியாக ரமேஷைத் தாக்கினார்கள். அவரைப் பின்பக்கமாக தலை, கழுத்து ஆகிய இடங்களைக் குறிவைத்து அரிவாளால் வெட்டினார்கள். ரமேஷ் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரால் தப்பித்தும் ஓடமுடியவில்லை.

அரிவாள் வெட்டில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கீழே சாய்ந்தார் ரமேஷ். காரில் வந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரமேஷை வெட்டிச் சாய்த்து விட்டு, மீண்டும் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். உடனே அந்தப் பகுதி பெரும் பரபரப்பானது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பொலிஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

ரமேஷின் உடலை மீட்ட பொலிஸார், அதனைப் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

ரமேஷ் துடிக்க, துடிக்க வெட்டிக்கொல்லப்பட்ட காட்சி, அந்தப் பகுதி கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

ரமேஷைத் தீர்த்துக்கட்டியவர்களில் ஒருவர், அவரது பழைய நண்பர் என்று தெரியவந்தது. அவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

தொழிலில் ஏற்பட்ட பகை மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக ரமேஷ் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ரமேஷின் பழைய நண்பர் ராகேஷ் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து விசாரித்து வருவதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் பொலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு