டில்லி மேயர் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி!

Share

கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாபஸ் பெற்ற நிலையில் டில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

இந்தியாவின் தலைநகர் டில்லியில், வடக்கு டில்லி, தெற்கு டில்லி, கிழக்கு டில்லி என 3 ஆகப் பிரிந்து இருந்த டில்லி மாநகராட்சி, கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது.

இந்த இணைப்பின் மூலம் 272 இடங்கள் 250 ஆகக் குறைந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி, ஒருங்கிணைந்த டில்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 134 இடங்களை வென்று அசத்தியது. பா.ஜனதாவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியது. 3 இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றினர்.

மேயர் பதவி

பெரும்பான்மையாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு மேயர் பதவி எளிதாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது.

4 ஆவது முறையாக கடந்த பெப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளர் ஷெல்லி ஒபராய், பா.ஜனதா வேட்பாளரை 34 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மேயர் ஆனார். துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார்.

பா.ஜனதா வாபஸ்

டில்லி மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவி ஆண்டுதோறும் பெண், பொது, ஒதுக்கீட்டுப் பிரிவினர் என இனச் சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும்.

அதன்படி இந்த நிதியாண்டு தொடங்கியதைத் தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு மீண்டும் ஷெல்லி ஓபராயும், துணை மேயர் பதவிக்கு மீண்டும் ஆலே முகமது இக்பாலும் போட்டியிட்டனர். ஷெல்லி ஓபராயை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர் ஷிகாராய் நின்றார். முகமது இக்பாலை எதிர்த்து பா.ஜனதாவின் சோனி பாண்டே களம் இறங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினர்.

ஆம் ஆத்மி வெற்றி

இதனால் ஷெல்லி ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்வு பெற்றார்.

அதைப்போல துணை மேயர் பதவியும் போட்டியின்றி கிடைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு டில்லி முதலைமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு