சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்தவர்களை இராணுவ விமான உதவியுடன் பிரான்ஸ் அரசு மீட்டுள்ளது.
சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது.
எனினும், அதனையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்றது. இதனால், சூடானில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சூடான் நாட்டில் நடந்து வரும் இராணுவத்தினர் இடையேயான மோதலால் பிரான்ஸ் அரசும் தனது நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் விரைவாக அவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
இது பற்றி பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் இருந்து பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை அரசு விரைவாக வெளியேற்றத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்த வெளியேற்ற நடவடிக்கையில், ஐரோப்பிய மற்றும் கூட்டணி நாடுகளின் குடிமக்களும் அடங்குவார்கள் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
பிரான்ஸ் அரசின் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகின்றது. இதன்படி, அந்நாட்டின் இராணுவ விமானத்தின் உதவியுடன் நேற்றிரவு, இரண்டு முறை சென்று, திரும்பி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்படப் பலரும் வெளியேற்றப்பட்டனர்.
இதுவரை இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று டில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. எனினும், மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
சூடானில் இருந்து இந்தியர்கள் சிலர் உட்பட சகோதர மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் 66 பேரை வெளியேற்றி இருக்கின்றோம் என சவூதி அரேபியா அரசும் நேற்று தெரிவித்திருந்தது.
இதேபோன்று சூடானின் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஈராக், இந்தியா, எகிப்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பர்கினாபசோ, கத்தார் உள்ளிட்ட நாட்டு மக்களை சவூ தி அரேபிய அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் பேரில், சண்டை நடந்து வரும் சூடான் நாட்டில் இருந்து அமெரிக்க அரச அதிகாரிகளை, இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.