மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபராகப் பெயரிடுவதை மற்றும் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் மே 9 ஆம் திகதி, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தன்னைச் சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திதுக்கு அனுப்பிய கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மனுவொன்றில் கோரியிருந்தார்.
இதனைப் பரிசீலித்த நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.ஏ.ஆர் மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.