கல்வி நடவடிக்கைகள் நாளை முடங்கும்! – ஆசிரியர் சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

Share

வடக்கு – கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலர் ஜெயராஜ் குலேந்திர வொல்வின் தெரிவித்ததாவது:-

“கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விளைவுகளை நாம் முழுமையாக அனுபவித்துள்ளோம். இந்த நிலையில் புதிதாகக் கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் மக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள்.

வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் சார்பாக ஆதரவை வழங்குவதோடு ஒவ்வொரு ஆசிரியரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி வலுச்சேர்க்குமாறு கோருகின்றோம்” – என்றார்.

நீதிமன்றில்
சட்டத்தரணிகள்
முன்னிலையாகார்

தமிழர் தாயகத்தில் நாளை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு வவுனியா வலய சட்டத்தரணிகள் சங்கம் முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றில் நாளைய தினம் சட்டத்தரணிகள் முன்னிலையாகமாட்டார்கள் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சட்டத்தரணிகளை உள்ளடக்கியதே வவுனியா வலய சட்டத்தரணிகள் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தைகள்
நாளை மூடல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியத்தின் தலைவர் சின்னத்துரை முகுந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் பூர்வீக இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற இந்தக் கடையடைப்புப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம்.

வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் அன்றாடம் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டே வாழ்வாரத்தை கொண்டு சென்று கொண்டிருக்கக் கூடிய இக்கட்டான நேரத்திலும் கூட தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கான இவ்வாறான போராட்டங்களுக்கு எமது வாழ்வாதாரத்தையும் தாண்டி ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

ஆகவேதான் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளிலும் உள்ள வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம்” – என்றார்.

சலூன்கள்
நாளை பூட்டு

வடக்கு – கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சமாசம் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

சமாசத் தலைவர் உதயசங்கர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“வடக்கு, கிழக்கு அழகக சங்கங்கள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியுள்ளது.

ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்துக்கும் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் நாளைய போராட்டத்துக்கும் நாம் ஆதரவு வழங்குகின்றோம்” – என்றுள்ளது.

போக்குவரத்து
இடம்பெறாது

வடக்கு – கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக போக்குவரத்துச் சங்கங்களும் அறிவித்துள்ளன.

“ஹர்த்தால் அன்று எமது சங்கப் பணியாளர்களால் போக்குவரத்துச் சேவை எதுவும் முன்னெடுக்கப்படாது. நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்” – என்று யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத் தலைவர் கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத் தலைவர் ந.சற்குணராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு