நெடுந்தீவில் நடந்தது என்ன? – ஐவரையும் வெட்டியும் கொத்தியும் கொலையாளி வெறியாட்டம் (நேரடி ரிப்போர்ட்)

Share

  யாழ்., நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய பகுதியில் – கடற்படை முகாமுக்கு முன்பாக உள்ள வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 5 பேர் வெட்டுக்காயங்களுடன் நேற்றுக் காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பேர் பெண்கள். இருவர் ஆண்கள். வெளிநாட்டவரான 100 வயதுப் பெண்மணி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளரான கே.நாகசுந்தரி (வயது 83) (இவரது கணவர் குமுதினிப் படகு படுகொலையில் உயிரிழந்தவர்), அவரது சகோதரியான முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76), அவரது கணவரான நாகநாதி பாலசிங்கம் (வயது 82), வீட்டு உரிமையாளரின் இன்னொரு சகோதரியான லண்டனிலிருந்து வருகை தந்த வேலாயுதபிள்ளை நாகரத்தினம் (வயது 78), நெடுந்தீவைச் சேர்ந்த உறவினரான சுப்பிரமணியம் மகாதேவா (வயது 74) ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர். கனகர் பூரணம் (வயது 100) என்பவரே காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் உறவினர்கள்.

இன்றைய தினம் நெடுந்தீவிலுள்ள ஆலயத்தில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காகவே வெளிநாட்டவர்களும், உறவினர்களும் அங்கு வந்து நாகசுந்தரியின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்றுக்காலை வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், வெளிநாட்டால் வந்து தங்கியிருந்தவர்களுக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோதும், எவரும் பதிலளிக்கவில்லை. இதையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு அவர்கள், நெடுந்தீவில் குறித்த வீட்டுக்கு அருகேயுள்ள கடையொன்றின் உரிமையாளரைத் தொடர்புகொண்டுள்ளனர்.

அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்தவர்கள் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர். உடனடியாகப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த வீட்டை அண்மித்த பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் நெடுந்தீவிலிருந்து வெளியிடங்களுக்கான படகுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டது.

வீட்டின் வெளிப்புறத்தில் இரண்டு பெண்களின் சடலங்கள் ஒன்றுடன் ஒன்று கட்டிப்பிடித்தவாறு காணப்பட்டுள்ளன. வீட்டினுள் இருந்த அறைகள் ஒவ்வொன்றிலும் ஏனைய 3 பேரின் சடலங்களும் காணப்பட்டுள்ளன. அதில் ஒரு சடலம் இருந்த அறையின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

உயிரிழந்த அனைவரது முகம் மற்றும் தலைப்பகுதிகளிலேயே கொலையாளி கூரிய ஆயுதத்தால் குத்தியும், வெட்டியுமுள்ளான்.

காயமடைந்த 100 வயதான மூதாட்டி மற்றொரு அறைக்குள் கைகள் கட்டிய நிலையில் முனகிக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது தாடைப்பகுதியில் காயம் காணப்படுகின்றது.

உயிரிழந்த ஒருவரின் அடையாள அட்டை மடிக்கப்பட்டு மலசலகூடக் குழியினுள் போடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது. எனினும், அது இடைநடுவே சிக்கிக்கொண்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிலின் நின்றிருந்த நாயையும் கொலையாளி கழுத்தில் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, கொலையாளியுடன் சண்டை பிடித்தமைக்கான தடயங்கள் எதுவும் வீட்டில் காணப்படவில்லை எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவர்களின் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் – சுமார் 10 தொடக்கம் 15 மீற்றர் தூரத்திலேயே கடற்படையினரின் முகாம் காணப்படுகின்றது. இந்தக் கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னர் நடந்திருக்கவேண்டும் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று, உடலங்களை பார்வையிட்டு விட்டு திரும்பிய வேளை நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளைக் கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.

இதேவேளை, யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 3 பொலிஸ் குழுக்களை களமிறக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் கோரக் கொலைகள் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று நள்ளிரவு புங்குடுதீவில் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 பவுண் நகைகளும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தவர்களைத் தான் வெட்டியும் கொத்தியும் கொலை செய்தார் எனவும், அதன்பின்னர் வீட்டில் இருந்த பவுண் நகைகளை எடுத்துக்கொண்டு தான் புங்குடுதீவுக்குத் தப்பிச் சென்றார் எனவும் பொலிஸாரிடம் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு