– ஜி.ஸ்ரீநேசன்,
(முன்னாள் எம்.பி.
மட்டக்களப்பு மாவட்டம்)
ஜனநாயக நாடுகளில் சட்டங்களை உருவாக்குவது என்பது முக்கியமான விடயமாகும். அந்த சட்டங்கள் மக்கள் நலன் சார்ந்ததாகவும் அவர்களைப் பாதுகாப்பதாகவும் அமைய வேண்டும். ஆனால், இலங்கையில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம்,இனி உருவாக்க நினைக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்றவை மக்கள் நலன்கள் என்ற போர்வையில், அதிகாரத்தையும்,ஆளும் அதிகாரவர்க்கத்தையும் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டுள்ளன.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக 30 ஆண்டுகளாக அகிம்சை வழியில் ஜனநாயக ரீதியாகப் போராடினர். அதற்கான பதில் ஜனநாயக வழியில் அமையவில்லை. மிரட்டல்,ஒடுக்கல், அகற்றல் அழித்தல் என்கின்ற எதிர்மறையான முறைகளில் வன்முறையான பதில்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் 30 ஆண்டுகளின் பின்னர்,த மிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவ்வேளைகளிலும் பேச்சுவார்த்தை மூலமாக இணைக்கமான தீர்வு காண்பதற்கு வாய்ப்புகள் இருந்தன. அதனை நிராகரித்து 1979 இல் 48 ஆம் இலக்க தற்காலிக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
மேலும், 1983 கறுப்பு யூலை மூலமாகத் தமிழர்கள் 3000 பேர்வரை கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழ் இளைஞர்கள் தமது ஆயுதப் போராட்டத்தினையும் பலப்படுத்தினர்.
இப்படியான நிலையில் வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த தமிழர்களை ஒடுக்கக் கூடிய முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாகவும் கொடுமையாகவும் பிரயோகிக்கப்பட்டது.
அச்சட்டத்தால் தமிழர் கள்தான் அதிகமாக ஒடுக்கப்பட்டதால், அது பற்றி ஏனைய மக்கள் கண்டு கொள்ளவில்லை.
கடந்த 2019 ஏப்பிரல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர், அச்சட்டம் முஸ்லிம் மக்களைப் பாதித்தது. 2021 அறகலயப் போராட்டத்தின் பின்னர், அப்பயங்கரவாதத் தடைச் சட்டம் சிங்கள இளைஞர்களைப் பாதித்தது. அப்படியான நிலையில்தான் அச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சிந்தனை சகல மக்களிடமும் ஏற்பட்டது.
அதேவேளை, ஆளும் அதிகார வர்க்கம் அரகலய போராட்டத்தின் மூலமாக ஓருண்மையைக் கற்றுக்கொண்டது. மக்கள் சக்தியின் மூலமாக ஆளும் வர்க்க அதிகார சக்தியை அகற்ற முடியும் என்பதே அப்படிப்பினையாகும்.
சிக்களவர்கள், பெளத்த பிக்குகள், படையினர் ஆகியோரின் கீரோவாக அதிகார மமதையோடு ஆட்சிப்பீடம் ஏறிய கோத்தாவை இரண்டே வருடங்களில் அரகலயப் போராட்டம் வெளியேற்றியது.
இலங்கை வரலாற்றில் சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற புதிய திருப்பமாக இது அமைந்தது. இப்படியான திருப்பம் சிங்கள அதிகார வர்க்கத்தினை கிலிகொள்ள வைத்தது.
இந்தப் பாடத்தின் பிறகு படிப்பினையாக அமைவதுதான் தற்போது பேசப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும். இச்சட்டம். மக்களையோ ஜனநாயகத்தையோ பாதுகாப்பதை விட அரசியல் சமூக பொருளாதார ரீதியாகக் குற்றமிழைத்த அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதையே முதன்மைப்படுத்துவதாக உள்ளது.
இந்நாட்டை 75 ஆண்டுகளாக ஆட்சி செய்து நாட்டையும் மக்களையும் தோல்வியடையச் செய்த,நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய அதிகாரவர்க்கத்தைத் தொடர்ந்தும் பாதுகாப்பதே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் குறிக்கோளாக அமையவுள்ளது.
இதனால்தான் உள்நாட்டு வெளிநாட்டு மனிதவுரிமை அமைப்புகள்,சிவில் அமைப்புகள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்னும் அரச பயங்கர சட்டத்தை எதிர்க்கின்றனர். பயங்கரமான காட்டாட்சிக்கான காட்டாட்சிச் சட்டமாக இது அமையவுள்ளது என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்காக தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை. யுத்தம் அற்ற நாட்டில் மக்களுக்கான ஜனநாயக சட்டங்களையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைக் கைதிகளாக வாழ விரும்பவில்லை. சுதந்திரக் காற்றைச் சுவாசித்து சமத்துவமாக ஜனநாயக வாழ்க்கை வாழவே அவர்கள் விரும்புகின்றார்கள். பயங்கரவாதச் சட்டங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும் ஒடுக்கு முறைக்காகவுமே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்படியான நிலையில் பயங்கரமாக மக்களை ஒடுக்குவதற்கு கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவையாகவுள்ளது. மனித உரிமை, பொருளாதாரம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றங்களை மறைப்பதற்கும் அதற்காகப் போராடும் மக்களை அடக்குவதற்கும் பயங்கர சட்டங்கள் அரசுக்குத் தொடர்ந்தும் தேவையாகவுள்ளது.