அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் தேசிய அரசு நிறுவப்படுமானால் அது நாட்டுக்குப் பேரழிவாகவே அமையும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் உத்தர லங்கா சபாகய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
தேசிய அரசமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கவுள்ளார். இந்த அழைப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் தேசிய அரசில் ‘உத்தர லங்கா சபாகய (விமல், வாசு, கம்மன்பில கூட்டணி) இணையுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தேசிய அரசு தொடர்பான யோசனையை 2022 ஏப்ரல் 8 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எமது அணிதான் முன்வைத்தது. எனினும், அந்த யோசனையை அவர் ஏற்கவில்லை.
தேசிய அரசு அமைக்கப்பட வேண்டுமானால் அதற்கு முன்னர் பொதுவானதொரு வேலைத்திட்டம் அவசியம். அந்த வேலைத்திட்டத்தை அடிப்படையாக வைத்தே ஆதரிப்பதா அல்லது இல்லையா என்ற முடிவுக்கு எதிரணிகளால் வரக்கூடியதாக இருக்கும்.
மாறாக அமைச்சு பதவிகளை அதிகரித்தும் கொள்ளும் நோக்கில் தேசிய அரசு அமைக்கப்படுமானால் அது நாட்டுக்கு மற்றுமொரு அழிவாகவே அமையும். பொது வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து எமது முடிவு அறிவிக்கப்படும்.” – என்றார்.