யாழ்., வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிகள் சிலரைப் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் எனவும், இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்பில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பெற்றோரும் அதிபரிடம் இந்த விடயம் சம்பந்தமாக முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள் என்று பெற்றோரிடம் அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தரம் ஒன்றிலிருந்து குறித்த பாடசாலையில் கற்ற மாணவி அதே வலயத்திலுள்ள வேறு பாடசாலையில் இணைந்துள்ளார்.