“தமிழ்பேசும் மக்களின் குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டும் முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டும் இரண்டாவது ஆண்டுக்குள் காலடி வைக்கின்ற ‘விழிகள்’ இணையத்தள செய்திச் சேவைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்
‘விழிகள்’ இணையத்தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“மக்களுக்கு உண்மையான செய்திகளைக் கொண்டு செல்வது ஊடகங்களின் பிரதான கடமை. மக்கள் எப்போதும் தங்களுக்கு முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக உண்மைகளை அறிவது அவர்களின் மறுக்க முடியாத உரிமை. அதை ஊடங்கள் நிறைவேற்றுவது ஒரு புனிதமான பணி.
மக்களுக்கு உண்மைகள் சென்றடைந்தால்தான் அவர்கள் அந்த உண்மைகளின் அடிப்படையில் தங்களது நியாயபூர்வமான முடிவுகளை எடுக்கலாம்.
அந்தவகையில், ‘விழிகள்’ இணையத்தளம் தன்னால் இயன்றளவுக்கு அந்தக் கடமையை நிறைவேற்றி வருகின்றது.
தன்னை நோக்கி வந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்காக ‘விழிகள்’ இணையத்தளம் குரல் கொடுத்து வருகின்றது. இந்தத் துணிகரப் பணியை ‘விழிகள்’ இணையத்தளம் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பது எனது அவா.
மக்களுக்குச் சேவை புரிந்து அதன் மூலமாக எங்களுடைய மக்கள் தங்கள் கருமங்கள் சம்பந்தமாக தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு ‘விழிகள்’ இணையத்தளம் தொடர்ந்து செயற்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
அத்துடன் ‘விழிகள்’ இணையத்தளத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் அதன் நிர்வாகத்தினருக்கும், தமிழ் மக்களுக்கும் எனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.
அதேவேளை, ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் ‘விழிகள்’ இணையத்தளத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் காணொளி வடிவில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.