முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்று இனந்தெரியாத ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.இளங்கசிங்கவிடம் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இரவு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளை வானில் கொழும்பு 7, லண்டன் பிளேஸில் உள்ள முன்னாள் சட்டமா அதிபரின் அலுவலகத்துக்குள் நுழைந்து, அலுவலகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் சோதித்த பின்னர் ஒரு கோப்பை எடுத்துச் சென்றார் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
சி.சி.டி.ரி. காட்சிகளின்படி, சந்தேகநபர் சுமார் பத்து நிமிடங்கள் அலுவலகத்துக்குள் கோப்புகளைச் சோதித்துள்ளமை தெரியவந்துள்ளது.