சம்மாந்துறை பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகத் தெரிவில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மலையடி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகக் காலம் முடிந்த நிலையில் நேற்று (07) மாலை நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு குழுவினர் பெருநாள் முடிந்தவுடன் நிர்வாகத்தைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும், மற்றைய குழுவினர் ஓரிரு தினங்களுக்குள் நிர்வாகத்தைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நிர்வாகத்தைத் தெரிவு செய்வது என முடிவு செய்யப்பட்டுக் கூட்டம் கலைந்தது.
கூட்டத்தில் பங்குபற்றிய இரண்டு குழுக்களும் வெளியே வரும் போதே மோதல் இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வரும் சம்மாந்துறைப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இதுவரை நால்வரைக் கைது செய்துள்ளனர்.