மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவின் மனைவியை சர்வதேச பொலிஸாரின் ஊடாகக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 15ஆம் திகதி ஹரக் கட்டாவுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணந்துறை ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷித இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இரண்டு குற்றவாளிகளும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு நீண்ட விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணையின் போது ஹரக் கட்டா வழங்கிய தகவலின்படி, அவரது மனைவி சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மிக விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.