“இலங்கையில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டமாகும்.”
– இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனையில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது நாட்டுப் பொருளாதாரத்தை நாமசமாக்கிய ராஜபக்சக்களை மக்கள் விரட்டினார்கள். ஆனால், அவர்களைக் காப்பாற்ற பரமாத்மா போல் ரணில் விக்கிரமசிங்க வந்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சிக் காலத்தில் நல்லவராக இருந்தார். இந்த ஆட்சியில் அவர் மோசமானவராக உருவெடுத்துள்ளார்.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது, தமிழர்களை அடக்குவதற்குக் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம்தான் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம். அந்தக் காலத்தில் சிங்களவர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
இன்று அந்தச் சட்டம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக அரசால் மாற்றப்படவுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் ஊடாக ஒரு நபர் கைது செய்யப்பட்டால் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்தப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் தமிழ் முற்போக்குக் கூட்டணி முழுமையாக எதிர்க்கின்றது.” – என்றார்.