அரசால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படுகொலையை எதிர்த்து மிகப் பெரிய எதிர்ப்புப் போராட்டத்தை வடக்கு – கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நாளில் முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணத்திலே தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சமூக சமய தொழிற்சங்க அமைப்புகள் மத்தியிலான கூட்டம் நடைபெற்றது. ஏழு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் 22 இற்கும் மேற்பட்ட மத, சமூக மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழ் மக்களின் தொன்மையையும் தேசியத்தையும் சிதைக்கும் வகையில் கலாசார பண்பாட்டு மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்து நமது இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் சைவ ஆலயங்களை நிர்மூலமாக்கியும், அங்கு பௌத்த சின்னங்களை நிறுவியும் அரசால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டம் ஒன்றை வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நாளில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஒழுங்குகளை முன்னெடுக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் இவ்வேளையில் அதனுடைய கடுமையான எதிர் விளைவுகளை கவனத்தில்கொண்டு அந்தச் சட்ட வரைவை எதிர்த்தும் அதை நிறைவேறாமல் தடுப்பதற்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களினுடைய பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் நடத்தி ஒன்றிணைந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான திகதிகள், விவரங்கள் என்பன ஏற்பாட்டுக் குழுவினரால் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.