வவுனியா, தாண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரைக் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்று வருகின்றார். குறித்த
மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் துஷ்பிரயோகங்களையும் கூறி அழுதார். இதையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தினார்.
ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியிடம் சம்பவத்தின் உண்மைத்தன்மையை விசாரித்து அறிந்துகொண்டு உடனடியாக வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தைப் பிரிவுக்குத் தெரியப்படுத்தினார். அவர்கள் வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் – பெண்கள் பிரிவுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த 10 வயது மாணவி மூவரால் கடந்த 4 வருடங்களாகத் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து துரிதமாகத் செயற்பட்ட வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்பான மூவரைக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலகர பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர், மாணவியின் உடன் பிறந்த சகோதரனான சமனங்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞர், உறவினரான வைரவபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் பின் மூவரும் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என்றும், சிறுமி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.