வெடுக்குநாறி இடித்தழிப்புக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Share

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்த வாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விஷமச் செயலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மீகத் தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்புகுநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தைத் தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு” போன்ற கோஷங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்துக்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு எனக் கோஷமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை குறித்த வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றனர். அங்கு ஜனாதிபதிக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.

இதையடுத்து இது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபயின் வடக்குக்கான இணைப்பாளரும் மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவன் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், செ.கஜேந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், காணாமல்போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

  

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு