“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலமுனைப் போட்டி இருக்காது.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“எமது கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தீர்க்கதரிசனமாகக் கூறிய பல விடயங்கள் தற்போது உண்மை என நிரூபணமாகி வருகின்றன. அதனால்தான் தனி ஒருவராக நாடாளுமன்றம் சென்று, முழு நாட்டையே நிர்வகிக்கும் வகையில் தற்போது தீர்மானங்களை அவர் எடுத்து வருகின்றார்.
இன்று வரிசை யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மின்வெட்டு அமுலில் இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பமாகும்.
ஜனாதிபதியின் பின்னால் பலர் அணிதிரள்கின்றனர். பலர் எதிர்காலத்தில் இணைவார்கள். மொட்டுக் கட்சியும் ஜனாதிபதியிடம் வேலைத்திட்டத்தை அனுமதிக்கின்றனர். எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலமுனைப் போட்டி இருக்காது.” – என்றார்.