வவுனியா, ஒலுமடு – வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழித்தொழிக்கப்பட்ட ஈனச் செயல் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படுபாதகச் செயலுக்கு எதிராக பலமுனைப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
நல்லூர்
இது தொடர்பில் நல்லூர் ஆலயச் சூழலில் இன்று மாலை 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது என்று சைவமகா சபையின் பொதுச் செயலர் மருத்துவர் பரா.நந்தகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை சுதந்திரமடைந்த பின்னரே எமது பழமைச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. முல்லைத்தீவிலும், வன்னியிலும், மன்னாரிலும் சைவத்தமிழர்கள் பல்வேறு விதமாக தொடர்ந்தும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
திருநீறு பூசுவதையும் நடராஜர் சிலை வைப்பதையும் பற்றி பேசும் நாங்கள் இந்த விடயங்களில் கரிசனை கொள்வதில்லை.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுக்கப்பட வேண்டும். இந்த நிலையிலே நாம் போராட்டத்தை மேற்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை நிறுத்த அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென சர்வதேசத்துக்கும் செய்தியைச் சொல்கின்றோம்” – என்றார்.
வவுனியா
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி கோயிலில் ஆரம்பமாகும் பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை நடைபெறவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
“பாரம்பரியமாக நாம் வழிபட்டுவந்த வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோயிலை ‘இனந்தெரியாத’ விஷமிகள் திட்டமிட்டு அழித்துவிட்டனர். எமது இனத்தை நோக்கி ஏவப்பட்ட பல நூற்றாண்டு அடக்குமுறைகளின் இன்றைய வடிவமாகவே இதனை நாம் பார்க்கிறோம்.
இயற்கைக்கும் மரபார்ந்த நம் இடங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில்தான் ஆதிசிவன் வழிபாடுகளை ஆற்றி வந்தோம். நாம் நம்பும் தொன்மத் தெய்வங்களை நமது நம்பிக்கையின்படி வழிபடும் உரிமை அனைவருக்குமே உண்டு. ஆனால், தமிழர்களாகிய நமக்கு சுதந்திரமான வழிபாட்டு உரிமை கூட மறுக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் எமது உரிமைசார் வழிபடும் செயற்பாடுகளை மேற்கொண்ட கோயில் நிர்வாக அவையினராகிய எம்மவர்கள் மிக மோசமாகத் தண்டிக்கப்பட்டனர். தொல்லியல் திணைக்களமும் ஸ்ரீலங்கா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட வழக்கு இன்னமும் ஒரு முடிவுக்கு வராமல் நீள்கின்றது.
வழக்குத் தொடரப்பட்ட நாளிலிருந்து எதுவித ஆலய வழிபாடுகளையும் செய்ய முடியவில்லை. வழக்குத் தொடரப்பட்ட நாள் தொடக்கம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த எமது கோயில் தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலானது உலகெங்கும் வாழும் மொத்த தமிழர்களையும் உளப்பூர்வமாகத் தாக்கியிருக்கின்றது. நமது வழிபாட்டு உரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த உரிமை மறுப்புக்கு எதிரான நமது குரலை உலகின் முன் உரத்துச்சொல்லவேண்டிய கட்டத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றோம்.
எமது வழிபாட்டு உரிமை நீக்கமும், பண்பாட்டு அடையாள அழிப்பும் நிகழ்த்தப்படும் சமநேரத்தில் அதற்கான எதிர்ப்பையும் கண்டனத்தையும் நம் தெய்வங்கள் காட்டிய அறவழியில் அணிதிரண்டு வெளிக்காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
எனவே, பக்தியும் அறமும் நிறைந்த தமிழர்களும், கட்சித்தலைவர்களும், ஆசிரியப் பெருமக்களும் மற்றும் சட்டவாளர்களும் எமது உரிமைகளுக்காக குரலெழுப்ப வருமாறு வேண்டுகின்றோம்” – என்றுள்ளது.