அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தைக் பெற்றுள்ளது.
எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாற்பது இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வென்று சாதனை படைத்துள்ளது.
ஹெல்வெற்றாஸ் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அனுசரணையில், இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பேராதனைப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பன பங்குபற்றியிருந்தன.
துறைசார் நிபுணர்களாலும், ஊடகத் தொழில்வாண்மையாளர்களாலும் சுமார் ஒரு வருடமாகத் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட செயலமர்வுகள், பயிற்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, நான்கு பல்கலைக்கழகங்களிடையே இப்போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.
பல்லூடகக் கட்டுரைகள், வலைப்பூக்கள், மொபைல் புகைப்படங்கள், டிஜிட்டல் கமெரா புகைப்படங்கள், கருத்துப் படங்கள் மற்றும் டூடுள் சித்திரங்கள், மொபைல் வீடியோ கதை சொல்லல், குறும் படங்கள், டிஜிட்டல் நாடகங்கள் ஆகிய எட்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தலா 5 போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், 6 போட்டிகளில் மூன்றாம் இடங்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் வெற்றி கொண்டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் 5 இடங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளில் டிஜிட்டல் கமெரா புகைப்படங்கள், கருத்துப் படங்கள் மற்றும் டூடுள் சித்திரங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அனைத்து இடங்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களே கைப்பற்றிக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்களில் நேரடியாகப் பங்குபற்றிய மாணவர்கள், தாம் பெற்ற விருதுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், விரிவுரையாளர்கள் தினேஷ் கொடுதோர், அனுதர்ஷி கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.