கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடன் அகற்றுமாறு கோரிக்கை!

Share

இரண்டு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று கச்சதீவு யாத்திரை தல பரிபாலகர் அருட்பணி வசந்தன் அடிகளார் கோரிக்கை விடுத்தார்.

கச்சதீவில் பெளத்த சின்னங்களும், புத்தர் சிலைகளும் வைக்கப்பட்டமை தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கச்சதீவு என்றாலே இந்தியத் தமிழக மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் ஏன் அண்மைய காலமாக சிங்கள மக்களுக்கும் ஞாபகத்துக்கு வருவது புனித அந்தோனியார் ஆலயமே.

கச்சதீவு அந்தோனியாருக்காக அர்ப்பணிக்கப்பட்ட தீவாகத் தொன்றுதொட்டு காணப்படுகின்றது.

ஆனால், திட்டமிட்ட வகையில் அண்மைய நாட்களில் இரண்டு புத்த பெருமானின் சிலைகள் வைக்கப்பட்டதுடன் அரச மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளன.

யாருக்கும் தெரியாத வகையில் உயரமாக பனை ஓலைகளால் வேலியமைத்து புத்தர் சிலைகள் மூடப்பட்டுக் காணப்படுகின்றமையை சில நாட்களுக்கு முன்னர் பார்த்த புகைப்படங்கள் மூலம் அறியக்கிடைத்தது. எதிர்காலத்தில் வரலாற்றைத் திரிபுபடுத்துவதற்கான முயற்சியே இது.

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்கின்றது. அங்கு 7 தொடக்கம் 10 வரையான கடற்படையினர் கடமையாற்றுகின்றனர். அவர்கள் வழிபட சிறியதான புத்தர் சிலையை வைத்து வழிபடலாம். ஆனால், இவ்வளவு பெரிய புத்தர் சிலைகள் எதற்கு? அதை ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும்?

கச்சதீவில் எந்தப் பகுதியிலும் அரச மரங்கள் இல்லை. ஆனால், திட்டமிட்ட வகையில் அரச மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழர் பகுதியில் பௌத்த திணிப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

போருக்குப் பின்னர் இன ஒற்றுமை பற்றி பேசப்படும் போது இவ்வாறான விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இரண்டு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள இவ்வாறான விடயங்கள் அகற்றப்பட வேண்டும். கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனிதத்துக்கும் தனித்துவத்துக்கும் பாதிக்காத வகையில் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும்.” – என்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு