உலக நீர் தின விழா நாளை பிற்பகல் 2 மணிக்கு இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்கவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வில், யூ.என்.டி.பி. இலங்கை வதிவிடப் பிரதிநிதி அஷுசா குபோட்டா சிறப்புரையாற்றவுள்ளார்.
உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன.
அத்துடன், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் 25 வருடங்களுக்கு மேலாகச் சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயமும், கடந்த ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்குப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமர திவாகர உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் வசந்தா இலங்ஹசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.