“ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே முதலில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைக் கேட்கின்றோம். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாம் தேர்தலைக் கேட்கவில்லை.”
– இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
‘உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றீர்களா?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தோல்விப் பயம் உள்ளவர்கள்தான் தேர்தலை வெறுப்பார்கள். தனிப்பட்ட அரசியல் இலாபத்தை விட ஜனநாயகத்தையே நாம் பார்க்கின்றோம்.
இப்போது உள்ளூராட்சி சபைகள் இல்லை; மாகாண சபைகள் இல்லை. நாடாளுமன்றத்தை விரும்பிய நேரம் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இப்போது வந்துவிட்டது.
இவ்வாறு மக்கள் சபைகள் இயங்காமல் கிடப்பது ஜனநாயகம் இல்லை. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே முதலில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைக் கேட்கின்றோம்.
அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாம் தேர்தலைக் கேட்கவில்லை” – என்றார்.
‘எதிர்க்கட்சி எம்.பிக்கள் தேர்தலை ஒத்திப்போடுமாறு கேட்கிறார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கூறினார். நீங்களும் அப்படி கேட்டீர்களா?’ என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது,
“கனவிலும் இல்லை. அவர் நகைச்சுவையாக – பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். அவர் மக்கள் ஆணையை நிராகரிக்கப் பார்க்கின்றார்.
கடந்த காலங்களில் – வலாற்றில் அவ்வாறு செய்ததால் இந்த நாடு பெரும் அழிவுகளைச் சந்தித்தது. அதே அழிவுகள் ஏற்பட இடமளிக்கக்கூடாது” – என்றார்.