340 உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
இதன்படி, அந்த நிறுவனங்களின் மாநகர மேயர், நகர முதல்வர்கள், தவிசாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதிகாரம் ஆணையாளர் அல்லது செயலாளர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது என்று மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு 4 வருடங்களுக்கான அதிகாரம் அதே ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வழங்கப்பட்டது.
இதற்கமைய, கடந்த வருடத்துடன் குறித்த 4 வருட அதிகார காலம் நிறைவடைந்தது.
எனினும், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்குள்ள அதிகாரத்துக்கு அமைய, உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலம் மேலும் ஒருவருடத்துக்கு நீடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் மாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், அதன் அதிகார காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில், நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிய அரசு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாடு இன்று அல்லது நாளை தமக்குக் கிடைக்கப்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர கூறினார்.
உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலம் நிறைவடைவதற்கு முன்னதாக புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.