தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்பதற்குச் சாத்தியப்பாடுகள் குறைவு என்று நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு (பவ்ரல்) எதிர்வு கூறியுள்ளது.
அரசு இந்த விடயத்தில் நீதிமன்ற முடிவுகளைக் கூட புறக்கணிப்பது வருந்தத்தக்கது என்று அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹன ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“அரசு மக்களின் உரிமையைப் பறிக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனினும், நீதிமன்ற முடிவுகளைக் கூட புறக்கணிக்கும் நிலைமைக்கு அரசு வந்துள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிடையே சமநிலை இப்போது முழுமையான குழப்பத்தில் உள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தாமதப்படுத்த அரசு சதி செய்து வருகின்றது.
நாடாளுமன்ற வரப்பிரசாதத்துக்குப் பின்னால் மறைந்திருந்து, நீதிமன்றத் தீர்ப்பைச் சவால் செய்வதன் மூலம் தேர்தலைத் தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது” – என்றார்.