“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கையின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். ரணிலால்தான் நாடு இன்று மீண்டெழுகின்றது.”
– இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களுக்குக் கூடாரங்களும், கதிரைகளும் வழங்கும் நிகழ்வு மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பியின் தலைமையில் நுவரெலியா நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நானும், எமது தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் பிரதேச சபையில் இருந்துதான் மக்கள் பிரதிநிதித்துவ அரசியலை ஆரம்பித்தோம். அப்போது மக்கள் தமது பிரச்சினைகளை எம்மிடம் எடுத்துரைப்பார்கள்.
நாம் எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறி, தேவையான வேலைத்திட்டங்களைப் பெற்றுக்கொள்வோம்.
இவ்வாறு நாம் மக்கள் சேவையாற்றியதால்தான் எம்மை மாகாண சபை முதல் நாடாளுமன்றம் வரை மக்கள் அனுப்பி வைத்தனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமானதொரு ஸ்தாபனமாகும். அதன்பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பலமான அமைச்சராக இருக்கின்றார். எனவே, எம்மால்தான் மலையகத்துக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.
மக்கள் மென்மேலும் ஆணை வழங்கினால் எமது பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கப்படும். அதற்கு இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை சிறந்த களமாகப் பயன்படுத்திக்கொள்ளவும்.
நாட்டைப் பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாஸவுக்கும் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். எவரும் முன்வரவில்லை.
ரணில் விக்கிரமசிங்கதான் அச்சமின்றி நாட்டைப் பொறுப்பேற்றார். தற்போது நாட்டைப் படிப்படியாக மீட்டு வருகின்றார். உலக நாடுகள் அவரை ஆதரிக்கின்றன.
அவர் நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நிலைமை மோசமாக இருக்கும். நாமும் மக்கள் பக்கம் நின்று – மக்கள் சார்பில் அவரை ஆதரித்தோம். அவரின் அரசில் எமது கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சராக இருக்கின்றார். பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
அண்மையில்கூட உலக வங்கியின் ஆதரவுடன், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இலவச சத்துணவுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்” – என்றார்.