எமது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் அடுத்த முயற்சிதான் மின்சாரத் துண்டிப்பு என்று தமிழர் தாயகக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி தாய்மாரால் சுழற்சி முறையில் வவுனியா ஏ – 9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கொட்டகை அமைந்துள்ள வீதி மின் கம்பத்தில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கு இணைப்பு மூலம் மின்சாரம் பெறப்பட்டு போராட்ட கொட்டகைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த மின்சார சபையினர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகத் தெரிவித்து குறித்த போராட்ட கொட்டகையில் இருந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவுக்கு எதிராகப் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழர் தாயகக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“2,210 ஆவது நாளாக வவுனியாவில் இரவு – பகலாகப் போராட்டப் பந்தலில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.
வயசு முதிர்ந்த தாய்மார் இங்கு போராட்டத்தை மேற்கொள்ளும் போது இந்த இடம் பற்றையான இடமாக – இருட்டான இடமாகையால் பாம்புகள் பிரச்சினை என்று கூறும் போது போராட்டப் பந்தல் அமைத்ததற்கு மேலாக மின்குமிழ் ஒன்று இருந்தது. அதற்கு அப்போதைய வடக்கு மாகாண சபை முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் வவுனியா நகர சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் வவுனியா நகர சபைக்கு அறிவித்து அவர்கள் மின்சார சபைக்கு தகவல் வழங்கியே மின்னிணைப்பை ஏற்படுத்தித் தந்தார்கள்.
அதன் பின்னர் இரண்டு முறை மின்பழுது ஏற்பட்ட நேரமும் கொழும்பிலிருந்து நேரடியாக மின்சார சபைக்கும் அறிவித்து உடனடியாகச் செய்து கொடுக்குமாறு கூறி அவர்களே மின்குமிழ்களையும் வழங்கி மின்னிணைப்பை மீளச் சரி செய்து தந்தார்கள்.
சட்டவிரோதமாக மின்னிணைப்பைப் பெற நாங்கள் முயற்சி செய்யவில்லை. அவர்களே மின்சாரத்தைத் தந்து விட்டு சட்டவிரோதம் எனக் கூறி வவுனியா மாவட்ட தமிழர் தாயக சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை நேற்றுமுன்தினம் (09) கைது செய்து நேற்று (10) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ஒரு சரீரப் பிணையில் விடுதலை செய்து வழக்குத் திகதியை மே மாதத்துக்கு ஒத்திவைத்திருக்கின்றார்கள். அன்றைய தினம் மின்சாரத்தைத் துண்டித்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசோடு சேர்ந்து இயங்குகின்ற பெருந்தொகையான அமைச்சர்களுடைய கோடிக்கணக்கான மின்சார நிலுவைகள் உள்ளன. அவர்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படுத்தவில்லை. இங்கே குறைந்தளவிலான மின்குமிழ்களையை பாவித்திருந்தோம்.
அரசே மின்சாரத்தைத் தந்துவிட்டு ஏன் நிறுத்தி வைத்திருக்கின்றது? காலிமுகத்திடலில் அதிகமானோர் மின்சாரம் பாவிக்கும் போது அரசு எங்கு இருந்தது? சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒரு சட்டமா? தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதியா? அதனால்தான் நாங்கள் வெளிநாடுகளை அழைக்கின்றோம். அவர்கள் வந்தால்தான் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைக் கண்டுபிடிக்கலாம். தமிழ் இறையாண்மை ஒன்று இருந்தால் பிள்ளைகளைக் கண்டுபிடிக்கலாம்.
இங்கே இருக்கின்ற எந்தக் கட்டமைப்புக்களாலும் எந்த நீதியுமே தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை. எல்லாமே அநீதியே கிடைக்கின்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருட்டிலே தாய்மார்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தினமும் இரவில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவ்வாறான இன்னல்களுக்கு மத்தியிலே போராடி வருகின்றோம்.
ஒவ்வொரு விடயமும் இலங்கை அரசுக்குத் தெரியாமல் இல்லை. ஒவ்வொரு விடயமும் தெரியும். எவ்வளவு நெருக்கடிகளைத் தந்துவிட்டார்கள். அப்படி இருந்தும் எமது போராட்டத்தை நாங்கள் கைவிடமாட்டோம். அதை நிறுத்த இவர்களின் அடுத்த முயற்சிதான் இந்த மின்சாரத் துண்டிப்பு.
இலங்கை அரசு எந்தவொரு ரீதியிலும் எங்களுக்கான தீர்வைத் தராது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நீதிக்காகப் போராடுகின்ற ஒரு தாய் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு இருந்த பிள்ளையின் ஆதாரத்தைக் காட்டியும் அவருக்கு இன்று நீதி இல்லை. குற்றவாளிகள் எல்லோரும் சுதந்திரமாக வெளியே இருக்கும் போது மின்சாரத்தைச் சட்டவிரோதம் எனக் கூறி, பிள்ளையைத் தேடிக்கொண்டிருக்கின்ற தாயைக் கொண்டு போய் அடைப்பதிலே உங்களுடைய நீதித்துறை இருக்கின்றது. குற்றம் செய்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.
சமூகத்தின் – இனத்தின் ஆதரவோடு இருக்கும் போராட்டங்களுக்கு மின்சாரத்தை நிறுத்துவது சட்டவிரோதமானது. நீங்கள் செய்வதே அநீதியானது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த போராட்டம் அப்பகுதியில் கொட்டகை அமைத்து இடம்பெற்று வருகின்றது” – என்றார்.