“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கனவு.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எனப் பார்த்துக்கொண்டிருப்பதை விடவும் நாட்டுக்காக சேவை செய்யக்கூடிய நேரமே இது. அதனால்தான் பொது இணக்கப்பாட்டுடன் நிதி பற்றிய குழுவின் தலைமைப் பதவியை ஏற்கத் தீர்மானித்தேன்.
ஹர்ஷ டி சில்வாவுக்கு தலைமைப் பதவி கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நான் ஏற்றேன். பின்னர் பதவி விலகிவிட்டேன். ஆனால், ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் தலைவராகச் செயற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாஸவும் இணைய வேண்டும் என்பதே எனது கனவு.
தப்பித் தவறியேனும் ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ஆபத்து. எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் எனக் கூறுகின்றேன்” – என்றார்.