“உயர்மட்ட அழுத்தங்களால் தேர்தலைப் பிற்போடும் நோக்கில், நிதி வழங்குவதில் நிதி அமைச்சின் செயலாளர் இழுத்தடிப்புச் செய்வாரானால், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும். பின்னர் சிறைச்சோறு சாப்பிட வேண்டிய கதியே அவருக்கு ஏற்படும்” – என்று சட்டத்துறை பேராசிரியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. இனியும் நிதி விவகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. தேர்தலுக்கான நிதியை முடக்கி வைக்க முடியாது என உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
எனவே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு எடுக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது தேர்தலுக்கான நாள் கட்டாயம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், அரச அச்சக அதிபர் ஆகியோரை அழைத்து, தேர்தல் ஆணைக்குழு ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் கிடையாது. நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் நிதி அமைச்சின் செயலாளர் செயற்பட வேண்டும்” – என்றார்.