“தீர்வைக் குழப்பியடிக்கும் விடயத்தில் ஜே.வி.பி.யினரும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் சேர்ந்து செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் என்ற ஒரு விவகாரத்தை கையிலெடுத்து அவர்கள் தீர்வு முயற்சியை குழப்பியடிக்கும் வகையில் ஈடுபடுவது கவலையளிக்கின்றது.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வகட்சி கூட்டம் எப்போது மீண்டும் கூட்டப்படும் என்பது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசியல் தீர்வுக்கான சர்வகட்சி பேச்சு நடைபெற்றது. அந்தப் பேச்சு தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதனைக் குழப்பும் வகையில் பிரதான எதிர்க்கட்சி செயற்பட்டு வருகின்றது. இறுதியாக நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் பங்கேற்கவில்லை. எனினும் அந்தக் கட்சியில் தீர்வு தொடர்பில் ஆர்வமுள்ள ஒரு சிலர் பங்கேற்றனர்.
தீர்வைக் குழப்பியடிக்கும் விடயத்தில் ஜே.வி.பி.யினரும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் சேர்ந்து செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
என்னால் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வகட்சி கூட்டங்களிலும் தனிப்பட்ட சந்திப்புக்களிலும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் பங்கேற்று வருகின்றனர். அதேவேளை, ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தீர்வுக்கான பேச்சில் பங்கேற்று வருகின்றது.
அடுத்த சர்வகட்சி கூட்டத்தை விரைந்து கூட்டவுள்ளோம். இதற்கு மத்தியில் , தேர்தல் என்ற ஒரு விவகாரத்தை கையிலெடுத்து பிரதான எதிர்க்கட்சியினர் தீர்வு முயற்சியைக் குழப்பியடிக்கும் வகையில் ஈடுபடுவது கவலையளிக்கின்றது.
தேர்தல் நடக்கும் நேரத்தில் நடந்தே தீரும். அதற்காக தீர்வுக்கான பயணத்தை ஒத்திவைக்க முடியாது. கட்சி பேதமின்றி இந்தப் பயணத்தில் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
சுதந்திர தினம் அன்று தீர்வு விடயம் தொடர்பில் நான் எனது பொதுவான நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு விசேட உரையூடாகத் தெரிவித்துள்ளேன்” – என்றார்.