நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலை நடத்துங்கள்! – ஜனாதிபதியிடம் ஓமல்பே தேரர் கோரிக்கை

Share

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாகக் காணப்படுமாயின் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசை ஸ்தாபிக்க வேண்டும். மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுக்குச் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது.”

– இவ்வாறு மக்கள் பேரவை சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தற்போது பாரிய போராட்டம் காணப்படுகின்றது. தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட அரசு பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசின் நோக்கத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைகளாலும், உள்ளூராட்சி சபைகளாலும் அரச செலவுகள் மாத்திரம் மிகுதியாகுகின்றதே தவிர நாட்டுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி 8 ஆயிரம் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதால் அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாகக் காணப்படுமாயின் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். இந்த நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணை சிறிதேனும் கிடையாது.

நாட்டு மக்கள் 225 உறுப்பினர்களையும் திருடர்கள்க் என கடுமையாக விமர்சிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண மக்களின் ஆதரவு அவசியம். ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அரசைத் தோற்றுவிக்க வேண்டும்.

மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுக்குச் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இந்த மாதம் கிடைக்கும் என அரசு குறிப்பிடுவதை நம்ப முடியாது” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு