தாலிக் கயிற்றால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனச் சந்தேகிக்கப்படும் 25 வயது இளம் பெண்ணொருவரின் சடலம், புஸல்லாவ, சோகம தோட்ட மேல் பிரிவில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் எல்பொட தோட்டத்தில், கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலாதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்
குறித்த பெண் முதல் கணவரைப் பிரிந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே வேறு ஒரு நபரைத் திருமணம் செய்துள்ளார் எனவும், இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்தனர் எனவும் தெரியவருகின்றது.
சம்பவ தினத்தன்று, எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய் வீட்டுக்குச் செல்வதற்காகக் கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ள போதும் அவர்கள் வீட்டுக்குச் செல்லவில்லை எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தப் பெண்ணின் இரண்டாவது கணவர் தலைமறைவாகியுள்ளார் எனவும், வேறு ஒரு இடத்தில் கொலை செய்யயப்பட்டு இங்கு கொண்டு வந்து சடலம் போடப்பட்டிருக்கக் கூடும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரதீப் ரட்ணாயக்க, பொலிஸ் அதிகாரி ரொசான் அமரசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய புஸல்லாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹேமகுமார தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.