சமஷ்டியைக் கேட்க முன் விக்கி தன் நிலைப்பாட்டில் தெளிவாக வேண்டும்! – இப்படிச் சொல்கின்றார் மனோ

Share

“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சமஷ்டி தொடர்பில் கரிசனை கொள்வதற்கு முன்னர் தனது அரசியல் நிலைப்பாடுகளில் தொய்வில்லாமலும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

தனியார் வானொலி ஒன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிடும் போதே மனோ கணேசன் இதனைக் கூறினார்.

‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. சமஷ்டியைப் பெறாமல் ஓயமாட்டேன் என்று கூறுகின்றார். ஆனால், ஜனாதிபதியோ சமஷ்டியைத் தரமாட்டேன் என்று கூறுகின்றார். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?’ – என்ற கேள்விக்கு மனோ கணேசன் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகின்றாரா? இல்லையா? என்பது கூட சரியாகத் தெரியவில்லை. அவரின் நிலைப்பாட்டில் உண்மையில் தெளிவு இல்லை. ஜனாதிபதிக்கு ஆதரவு என்று ஒரு தோற்றப்பாட்டை அவர் காட்டுகின்றார். ஜனாதிபதியும் அவருடன் நெருக்கம் என்று காட்டிக்கொள்கின்றார்.

விக்னேஸ்வரன் கொழும்பில் இருக்கின்றாரா அல்லது யாழ்ப்பாணத்தில் இருக்கின்றாரா என்பது கூடத் தெரியாது.

13 ஆவது திருத்தத்தைத் தொட்டுப் பார்க்கமாட்டோம் என்று சிலவேளைகளில் விக்னேஸ்வரன் கூறுகின்றார். சிலவேளைகளில் 13 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார். பின்னர் சமஷ்டி வேண்டும் என்று அவர் சொல்கின்றார்.

விக்னேஸ்வரன் சமஷ்டி தொடர்பில் கரிசனை கொள்வதற்கு முன்னர் தனது அரசியல் நிலைப்பாடுகளில் தொய்வில்லாமலும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஏனெனில் அவரின் அரசியல் நிலைப்பாடுகளில் தெளிவு இல்லை. நிறையத் தொய்வு இருக்கின்றது. அதை விக்னேஸ்வரன் மாற்றியமைக்க வேண்டும்.

மக்களின் ஆணையை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்துவார் என்று நான் எதிர்பார்கின்றேன்” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு