ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் முறையற்ற வரி விதிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்புவாழ்வு முடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துறைமுகம், விமான நிலையம், நீர்வழங்கல், இலங்கைப் பெற்றோலியம், சிறிலங்கா ரெலிகொம், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் உட்பட 30 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்தில் இறங்கவுள்ளன.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடாவிட்டாலும் மேற்படி தொழிற்சங்க நடவடிக்கைக்கு முழு ஆதரவை வழங்குவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அதிபர் – ஆசிரியர் கூட்டணி, தபால் ஊழியர்கள் சங்கம், புகையிரத சேவையாளர்கள் சங்கம், அரச ஊழியர்கள் சங்கம் உட்பட மேலும் பல அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி நாட்டில் 12 மாவட்டங்களில் போராட்டத்தை நடத்துவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. புகையிரத ஊழியர்கள் சங்கம், கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நண்பகல் 12 மணிக்கு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
கறுப்புப்பட்டி அணிந்து கடமைகளில் ஈடுபட இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதிபர், ஆசிரியர் கூட்டணியினரும் பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புகொடி ஏற்றி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். இன்றைய தினம் கறுப்பு ஆடை அணிந்து அல்லது கறுப்புப்பட்டி கட்டி பாடசாலைக்கு வருமாறு அதிபர், ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரிக்கொள்கையை மீளப் பெறுதலுக்கு அப்பால், சம்பள உயர்வு, ஜனநாயக உரிமைகள், அரச அடக்குமுறை நிறுத்தம் என்பன பற்றியும் இன்றைய போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் இல்லையேல், தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் எச்சரிக்கையையும் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ளன.