“இலங்கை தற்போது கெகில்லே மன்னரின் அரச சபை எடுத்த முடிவுகள் போன்ற நகைச்சுவையான மற்றும் முட்டாள்தனமான தீர்மானங்களை எடுக்கும் நாடாக மாறியுள்ளது.”
– இவ்வாறு டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் அரச அச்சக அதிபர் ஆகியோர் இணைந்து மக்களின் வாக்குரிமையை நீக்க முயற்சித்து வருகின்றனர். எனினும், சில அதிகாரிகளின் தேவைக்கு அமைய அதனைச் செய்ய முடியாது.
இலங்கையில் முதல் முறையாக இப்படியான சம்பவம் நடந்துள்ளது. தேர்தலை ஒத்திவைக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு அன்று அடிப்படையான காரணங்கள் இருந்தன. தேர்தல் ஒத்திவைக்கப்படுவது நாட்டுக்கு நடக்கும் மிகவும் கெடுதியான செயல்.
நாட்டின் பொருளாதாரத்துக்குச் செய்ய முடிந்த கெடுதியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்தார். தற்போதைய ஜனாதிபதி அதன் அடுத்த கட்டத்தை செய்து வருகின்றார்.
தற்போதைய அரசின் வரி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். ரூபாவில் மின்சாரக் கட்டணங்களை அதிகரித்து மின் துண்டிப்பை நிறுத்த முடிந்தது.
ரூபாவில் மின் கட்டணத்தை அதிகரித்த போது அதன் மூலம் டொலர் எப்படி கிடைத்தது என்பது கேள்விக்குறி. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட விதம் சம்பந்தமாகவும் சிக்கல் ஏற்பட்டது” – என்றார்.