தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும், இந்தச் செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சாதாரண வரவு – செலவுத் திட்டம் அல்ல எனவும், பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற 2023 வரி மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் தவிர்ந்த எந்தவொரு கட்சியோ, நபரோ அல்லது நிறுவனமோ சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்மொழிவுகளையோ மாற்று வழிகளையோ சமர்ப்பிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டவுடன் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதனை நிறைவேற்றவோ அல்லது நிராகரிக்கவோ வாய்ப்பு இருக்கின்றது. அதனை நிராகரிப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்துக்கு மாற்று யோசனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்” – என்றார்.
எமது நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களான பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கு நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் உத்தரவாதம் அளித்துள்ளது எனவும், இந்தியா தமக்குத் தனித்துவமான முறையைப் பின்பற்றுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
2023 வரி மாநாட்டை இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. வரிக் கொள்கை தொடர்பான நிபுணர் மட்டக் கலந்துரையாடலில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஸ்மன் ஆர். வட்டவல, இலங்கை பட்டய ஆளணி முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் கென் விஜயகுமார், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் (வரி விதிப்பு ) திஷான் சுபசிங்க மற்றும் வரிக் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி ஆணையாளர் நாயகம் என்.எம். எம். மிப்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டார்.