எதிரணியினர் உள்ளவர்கள் சிலர் அதியுயர் சபையில் பிசாசுகள் போல் செயற்படுகின்றனர் என்று கடும் விசனம் வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள் சபைக்குள் நேற்றுப் போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிரணி உறுப்பினர்களின் இந்தப் போராட்டம் தொடர்பில், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பிர்கள் சிலருடன் நேற்று மாலை நடத்திய கலந்துரையாடலின் போதே மேற்படி கடும் விசனத்தை ஜனாதிபதி வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் அதியுயர் சபையே நாடாளுமன்றம். மக்களின் பிரதிநிதிகளே இங்கு கூடுகின்றனர்.
இவர்கள் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் குறித்து மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும்.
மக்கள் பிரதிதிகள் சபைக்குள் வந்து சுயநல கட்சி அரசியலுக்காகச் செயற்பட்டால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் தடைப்படும்.
இதை உணர்ந்துகொண்டும் எதிரணியினர் உள்ளவர்கள் சிலர் அதியுயர் சபையில் பிசாசுகள் போல் செயற்படுகின்றனர். அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும். நாடாளுமன்றமும் அது தொடர்பில் கவனம் செலுத்தும். அதியுயர் சபையே நாடாளுமன்றம். அங்கு எடுக்கப்படும் இறுதி முடிவுகளை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது.
இந்நிலையில், எதிரணியினர் அவசரப்பட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று சபைக்குள் போராடுவது எந்த வகையில் நியாயமானது? அவர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றனர்” – என்றார்.