தலதா மாளிகையை அவமதித்தமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான வழக்கை முடிவுறுத்துவதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தலதா மாளிகை மற்றும் பௌத்த மதத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாக சேபால் அமரசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதி சேபல் அமரசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் மகாநாயக்க தேரர்களிடமும் பௌத்த சமூகத்திடமும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
அவ்வாறு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால் வழக்கை முடித்துக் கொள்ளத் தயார் என அரசு தரப்பு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் கூறினார்.
இந்தநிலையில், நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதிவாதி, பௌத்த தகவல் மையத்தின் அகுருவெல்லே ஜினாநந்த தேரர் மற்றும் ஏனையவர்களிடம் மன்னிப்புக் கோரினார்.
அதற்கமைய, சேபால் அமரசிங்கவை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.